Ads

ஊழலுக்கு எதிராக யோகா குரு- ஹசாரே கூட்டு முயற்சி;உண்ணாவிரத போராட்ட ஏற்பாடு தீவிரம்

வருகின்ற 4ம் தேதி யோகாகுரு பாபா ராம்தேவ் நடத்துகின்ற உண்ணாவிரத போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிக்க சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் அரசின் சுணக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தும் டில்லி ராம்லீலா மைதானத்தில் யோகாகுரு உண்ணாவிரதம் துவக்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது.

நாட்டில் மலிந்து விட்ட ஊழலை ஒழித்தே தீருவோம் என அரசுக்கு எதிராக கிளம்பியுள்ள விழிப்புணர்வு அதிவேகமாக காற்றில் பறந்து கலந்த ஒரு முக்கிய விஷயமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீப காலமாக இந்திய திருநாட்டை லஞ்சம், லாவண்யம் பிடித்து ஆட்டி வருகிறது. இந்த லஞ்சகோலத்தினால் உலக அளவில் நம் தாய்நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை விட நமது நாட்டுப்பணம் யார் வீட்டுக்கோ கொள்ளை போயிருக்கிறது என எண்ணும் போது ஒவ்வொரு குடிமகனும் இதனை தடுக்க முடியாத அளவிற்கு அரசியல் பிரமுகர்கள் நம்மை சட்டம் என்ற போர்வையில் அடக்கிப்போட்டு விட்டனர் என்பது தெளிவாகிறது.

ஒன்றல்ல, இரண்டல்ல,. நூறு கோடி, 500 கோடி : இந்த ஊழல் பெருச்சாளிகள் அரசு, அரசியல், நிர்வாகம் என்ற பெரிய பொந்துக்குள் மறைந்து கிடந்திருக்கின்றனர். தற்போது வரும் ஊழல்கள் எல்லாம் ஒன்றல்ல, இரண்டல்ல,. நூறு கோடி, 500 கோடி ஆயிரம் கோடி என்ற அளவிற்கு வானத்தின் எல்லையில்லா அளவுபோல விரிந்து விட்டது. காரணம் கட்டுப்படுத்த யாரும் முன்வராததும், குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாவது வழங்காததும்தான் குற்றம்.இதற்கெல்லாம் முடிவு கட்டுவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தியாகி அன்னாஹசாரே திடீரென உண்ணாவிரதம் இருந்தார். ஊழல் ஒழிப்பு மசோதாவை தூசி தட்டுங்கள் இன்னும் திருத்தம் கொண்டு வந்து உடனடியாக புதிய வடிவம் கொண்டு வாருங்கள், குற்றவாளிகள் மீதான தண்டனையை அதிகரிக்க ஆணையிடுங்கள் என்பது தான் இவரது கோரிக்கை . இந்த குரலுக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு எழும்பியது நினைவிருக்கலாம். பிரதமர் அலுவலகம் அதிர்ந்து போனது.

விழிப்புணர்வு அலையை எழுப்பிட கிளம்பினார் யோகா குரு: இந்நிலையில் யோகா குரு மீண்டும் ஒரு விழிப்புணர்வு அலையை எழுப்ப கிளம்பியிருக்கிறார். மனதை ஒருமுகப்படுத்துவில் பாடம் நடத்தி வந்த வல்லவரான இவர் ஊழல் என்ற விவகாரத்தையும் மக்கள் மத்தியில் ஒருசேர் எண்ணத்தை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. யார், இந்த யோகா குரு பாபா ராம்தேவ் ? அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். யோகா மூலம் மக்களை திசை திருப்ப முயற்சித்து தனக்கென ஒரு ஆதரவு படையையே உருவாக்கியுள்ளார். இந்தியா முழுவதும் சென்று இலவச யோகா வகுப்பை நடத்தியுள்ளளார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை, முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார். ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 4ம் தேதியில் இருந்து, டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.இதனால் மத்திய அரசு பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் முயற்சி: இந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்திட யோகா குருவிடம் மத்திய அமைச்சர்கள் நேற்று பேச்சு நடத்தினர். இன்றும் அமைச்சர்கள் கபில்சிபல், பிரணாப், பன்சிலால் ஆகியோர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தனது முடிவில் மாற்றமில்லை என உறுதியாக தெரிவித்து விட்டார். இவரது போராட்டத்திற்கு தியாகி அன்னாஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார். ஊழல் ஒழிப்பு மசோதா உருவாக்குவதில் அரசு தம்மை ஏமாற்றி வருவதாகவும் , ராம்தேவ் உண்ணாவிரதத்தில் தாமும் பங்கேற்பதாகவும் கூறியுள்ளார்.

இன்று ராம்தேவ் அளித்துள்ள பேட்டியில் ; எனது போராட்டத்தில் பின்வாங்கும் எண்ணம் இல்லை. திட்டமிட்டபடி 4 ம் தேதி உண்ணாவிரதம் இருப்பேன். இதில் எனக்கு நாடு அளவிலான ஆதரவு இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனக்கும், அன்னா ஹசாரேவுக்கும் எவ்வித பிளவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று ; ஹசாரே கோபம்: ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஊழலை வேரறுக்க வேண்டும் என்ற விருப்பம் உண்மையில் மத்திய அரசிடம் இல்லை. லோக்பால் மசோதாவை வரையறுப்பு அமைக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளை மத்திய அரசு ஏமாற்ற நினைக்கிறது. ஊழலை ஒழிக்க என்னென்ன சட்ட திருத்தம் செய்ய வேண்டும், விசாரணை வரம்புக்குள் யார், யாரை எல்லாம் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் கூறிய கருத்துக்களை பரிசீலினை செய்வதாக உறுதி அளித்திருந்த மத்திய அரசு இப்போது ஏமாற்ற துவங்கியிருக்கிறது. மத்திய அரசின் சொல்லிலும், செயலிலும் மாறுபாடு காணப்படுகிறது. லோக்பால் மசோதா குழுவில் உள்ள சமூக ஆர்வலர்களை மத்திய அரசு வேவு பார்க்கிறது. இப்போது பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் என்று அறிவித்ததும் மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அங்கும் இங்குமாக ஓடுகிறார்கள். ராம்தேவை அழைத்து வர மத்திய அமைச்சர்களே விமான நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?. இவ்வாறு ஹசரே கூறியுள்ளார்.


அமைச்சரவை அவசர கூட்டம்: இன்று காலையில் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, ப. சிதம்பரம், கபில்சிபல் , சுபோகாந்த் சகாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் இந்த கூட்டத்தில் ராம்தேவ் போராட்டம் தொடர்பாக எதுவும் விவாதிக்கவில்லை என சிதம்பரம் கூறியுள்ளார்.

மாலையில் காங்., உயர்மட்டக்குழு கூடுகிறது: இன்று மாலை காங்., தலைவர் சோனியா தலைமையில் காங்., உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக காங்., எதிர்கொள்ள வேண்டிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

பதிவு செய்தது ErodeTimes on 6/02/2011 08:06:00 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for ஊழலுக்கு எதிராக யோகா குரு- ஹசாரே கூட்டு முயற்சி;உண்ணாவிரத போராட்ட ஏற்பாடு தீவிரம்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h