Ads

சேர்பிய படைத்தளபதிக்கு நடந்த கதி விரைவில் ராஜபக்சவுக்கும் வரும்! : சீமான்

8000 பொஸ்னிய முஸ்லீம் மக்களை படுகொலை செய்த சேர்பிய படைத்தளபதி கைது செய்யப்பட்டிருப்பது போல், 40,000 தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் விரைவில் கைது செய்யப்பட்டு போர்க்குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை :

கம்யூனிச நாடாக இருந்த யுகோஸ்லாவியாவில் இருந்து இன்று தனி நாடாகத் திகழும் பொஸ்னியாவில் 1995ஆம் ஆண்டு ஜூலையில் இந்த இனப்படுகொலை நடந்தது. செர்பிய மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து போராடிய பொஸ்னிய மக்களை, செர்பிய இனவெறி இராணுவம் மிருகவெறித்தனம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வந்தபோது, பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பொஸ்னிய முஸ்லிம்கள் 40 ஆயிரம் பேர் சிறிபிரீனிசா எனும் இடத்தில் ஐ.நா. அமைத்த பாதுகாப்புப் பகுதியில் தங்கவைக்கப்பட்டனர். அந்த இடத்தை ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 400 வீரர்கள் பாதுகாத்து வந்தனர்.

இந்த முகாமைச் சுற்றி வளைத்த செர்பிய படைத்தளபதி ராட்கோ மிலாடிச் தலைமையிலான செர்பிய படைகள், முகாமில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வெளியேற்றிவிட்டு, ஆண்களையும், சிறுவர்களையும், பல நூற்றுக்கணக்கான பெண்களையும் கொன்றொழித்தன. இந்தப் படுகொலை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டாவது உலகப் போருக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரிய இனப்படுகொலை இது வென்று, சிறிபிரனிசா படுகொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தீர்ப்பாயமும், அதன் பிறகு பன்னாட்டு நீதிமன்றமும் கூறின.

1995ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதியில் இருந்து சிறிபிரீனிசாவில் பொஸ்னிய, ஹெர்சிகோவீனா முஸ்லிம் களை அழிப்பது என்கிற திட்டத்துடன் செர்பிய படைகள் நடத்திய படுகொலை, ஐ.நா.வின் இனப்படுகொலை குற்றமும் தண்டனையும் பிரகடனத்தின் பிரிவு 2, துணைப் பிரிவு (ஏ), (பி) ஆகியவற்றின் படி இனப்படுகொலையே என்று பன்னாட்டு நீதிமன்றம் முடிவு செய்கிறது என்று 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.
8,000 பேரைக் கொன்ற செர்பிய தளபதியின் நட வடிக்கையை இனப் படுகொலை என்று உறுதி செய்துள்ள சர்வதேசச்சமூகம், ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை இன்றுவரை போர்க் குற்றம் என்ற அளவில்தான் பேசி வருகிறது. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை கூட, இலங்கை அரச படைகளால் பத்தாயிரக் கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை போர்க்குற்றம் என்றுதான் கூறுகிறது.

8,000 பேரை இனப்படுகொலை செய்த ராட்கோ மிலாடிச்சிற்கு ஏற்பட்ட அதே நிலை, இனப் படுகொலையாளர் எவரும் நிரந்தரமாகத் தப்பி விட முடியாது என்பதற்கு அத்தாட்சி என்பது மட்டுமின்றி, இலங்கையில் எம் தமிழினத்தைச் சேர்ந்த ஒன்றரை இலட்சம் பேரை ஈவிறக்கமின்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்ஷ கும்பலிற்கும் ஏற்படும். இதே கும்பல் தமிழினப் படுகொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நாள் வரும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பதிவு செய்தது ErodeTimes on 5/30/2011 11:49:00 PM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for சேர்பிய படைத்தளபதிக்கு நடந்த கதி விரைவில் ராஜபக்சவுக்கும் வரும்! : சீமான்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h