Ads

முன்னாள் மத்திய மந்திரி ராஜாவின் ஜெயில் வாழ்க்கை..

கடந்த 3 மாத காலமாக ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா முதலில் சக கைதிகள் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். ஆனால் போக, போக சகஜமாக பழகிவிட்டார், காலை எழுந்தவுடன் வாக்கிங், மாலையில் பேட்மின்டன் என தமது ஜெயில் வாழக்கையை கடந்து வருகிறார். மற்ற கைதிகளை விட அது வேணும், இது வேணும் என அடம் பிடிக்கவில்லை என்றாலும் தனக்கு தமிழ் நாளிதழ் மட்டும் கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். இதனை ஏற்று இவருக்கு ஜெயில் அதிகாரிகள் வாங்கி கொடுத்துள்ளனர். இவரது நடவடிக்கை முழு திருப்தி அளிப்பதாகவும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஜெயில் அதிகாரி கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் மத்திய அமைச்சராக இருந்த ராஜா கடந்த பிப்ரவரி மாதம் 17 ம் தேதி திகார் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவருடன் 12 பேர் தற்போது ஜெயிலில் உள்ளனர். இதில் ராஜா 9 வார்டு சிறையில் 1 ம் நம்பர் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அன்றாட ஜெயில் வாழ்க்கை விவரத்தை ஒரு அதிகாரி கூறியுள்ளார். ராஜா நாள்தோறும் எவ்வாறு கழிக்கிறார் என்ற முழு விவரம் வருமாறு:

ராஜாவுடன் மாஜி போலீஸ் அதிகாரிகள் : இவருக்கு 15 க்கு 10 அளவு கொண்ட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயில் வளாகத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதியில் வாக்கிங் செல்கிறார். பின்னர் நேராக ஜெயிலுக்கு வந்து நாளிதழ்கள் படிக்கிறார். மாலையில் சக நண்பர்களுடன் ஒரு மணி நேரம் பாட்மின்டன் ஆடுகிறார். இரவில் சரியான நேரத்தில் தூங்கி விடுவார்.

இவரது வார்டுக்கு உட்பட்ட சிறையில் பத்திரிகையாளர் சிவானி பத்கர் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஆர். கே., சர்மா, மற்றும் கன்னாட் துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட உதவி கமிஷனர் எஸ். எஸ்., ரதி முக்கியஸ்தர்கள். ஏனைய 12 பேர் ஆயுள் உள்பட உயர்ந்த பட்ச தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சக கைதிகளுக்கும் உணவு வழங்கும் ராஜா :முதலில் ராஜா ஜெயில் கைதிகளுடன் சகஜமாக பழகாமல் உம்மெனவே இருந்தார். ஆனால் போக, போக தனது விறைப்புத்தன்மையை குறைத்து சிரித்து பேசலானார். ராஜாவுக்கு வீட்டு பதார்த்தம் வழங்க கோர்ட் அனுமதி தந்திருப்பதால் வீட்டில் சுடச்சுட தயாரான பதார்த்தங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இட்லி, சாம்பார், வடை, பொங்கல், மதியம் சாம்பார், ரசம், தயிர் என வரும். முதலில் சிரிய டிபன்பாக்சில் வந்தது தொடர்ந்து அதன் அளவு உயர்த்தப்பட்டது. இவைகளை தங்களுடைய சக கைதிகளுக்கும் கொடுத்து சாப்பிட சொல்கிறார். ஜெயில் சாப்பாட்டை சில நாட்களாக சாப்பிட்டும் கொள்கிறார். மேலும் இங்குள் கேண்டீனில் ஸ்னாக்ஸ் அயிட்டங்கள் வாங்கி கொள்ள அனுமதி உண்டு. ஜெயிலில் இருக்கும் ராஜா எவ்வித தொந்தரவும் தருவதில்லை, மற்ற கைதிகளுடன் ஒப்பிடுகையில் அவர் மிக சிறந்தவராக உள்ளார். தமிழ் பத்திரிகை எனக்கு அவசியம் வாங்கித்தர வேண்டும் என கேட்டார். அதற்கு மட்டும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஒரு ஜெயில் அதிகாரி.

கனிமொழிக்கு ஜாமின் உத்தரவு நிறுத்திவைப்பு ? : தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜாமின் மனு மீதான உத்தரவை விரைவில் அறிவிப்பதாக கூறி தள்ளி வைத்தார். சினியுக் இயக்குநர் மொரானியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பதிவு செய்தது ErodeTimes on 5/30/2011 10:55:00 PM. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for முன்னாள் மத்திய மந்திரி ராஜாவின் ஜெயில் வாழ்க்கை..

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h