Ads

சொட்டு நீர் பாசன மானியத்தில் ஏமாற்றும் அரசு:குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

"சொட்டு நீர் பாசன கருவி மானியத்தொகையில் விவசாயிகளை அரசு ஏமாற்றுகிறது,'' என, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி குற்றம் சாட்டினார். ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார்.


அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி பேசியதாவது: தமிழகத்தில் சொட்டு நீர் பாசன சாகுபடியில் ஈரோடு மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது. தென்னை, கரும்பு, மஞ்சள், வாழை என பயிர்கள் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மத்திய அரசு 40 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் என, 65 சதவீதம் மானியம் அளிக்கிறது. சொட்டு நீர் பாசன கருவி அமைக்க 22 நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளன.


 ஒவ்வொரு பயிருக்கும் ஏற்றபடி, ஒரு ஏக்கருக்கு இவ்வளவு ரூபாய் செலவாகும் என, அதிகாரிகளே நிர்ணயித்துள்ளனர். உதாரணத்துக்கு, கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் கருவி அமைக்க ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றால், அதில் 65 சதவீதம் மட்டும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் கூறும் வகையில் 40 ஆயிரம் ரூபாய்க்குள் அச்செலவு முடிவதில்லை. அதற்கு மேலாகும் தொகையை விவசாயிகள் தான் இதுவரை செலுத்தி வந்தனர். 40 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே 65 சதவீதம் மானியம் வழங்கி, விவசாயிகளை அரசு ஏமாற்றி வருகிறது. சொட்டு நீர் பாசன கருவி அமைக்க விவசாயிகளிடம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால், அந்நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென அரசு அறிவித்தது. அதனால், இரு மாதமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை. எனவே, விவசாயிகள், நிறுவனங்களின் அதிகாரிகள், வேளாண் அதிகாரிகள் என, முத்தரப்பு குழு அமைத்து, தமிழகம் முழுவதிலும் சில மாவட்டங்களை தேர்வு செய்து, அங்கு குறிப்பிட்ட பயிர்களுக்கு, சொட்டு நீர் பாசன கருவி அமைத்து, எவ்வளவு செலவாகிறது என்பதை கண்டறிந்து, அதன்படி தான் மானியம் வழங்கும் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.


அப்போது தான், இத்திட்டத்தின் முக்கிய நோக்கமான நீர் சிக்கனம், மின் சிக்கனம், ஆட்கள் பற்றாக்குறை சரி செய்வது என்பது நிறைவேறும். அதேபோல், சில மாவட்டங்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் முன் வருவதில்லை. அம்மாவட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யாமல், சொட்டு நீர் பாசனம் அமைக்க முன் வரும் ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். நபார்டு திட்டத்தில் 17 கோடியில் 60 கி.மீ.,க்கு தடப்பள்ளி வாய்க்கால் பணி நடக்கிறது. அப்பணியை ஒருவருக்கு கொடுப்பதால், நிறைவேற்றுவதில் சிக்கல் வரும். நான்கு பேருக்கு என, பிரித்துக் கொடுக்க வேண்டும் என கூறினோம்.


ஆனால், ஒருவருக்கே இப்பணி கொடுத்ததால், நான்கு மாதமாகியும் பணி முடியவில்லை. கிளை வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பதிவு செய்தது ErodeTimes on 5/31/2011 04:24:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for சொட்டு நீர் பாசன மானியத்தில் ஏமாற்றும் அரசு:குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h