Ads

காமன்வெல்த் ஊழல்: ஷீலா தீட்சித்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் -பா.ஜ.,

காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய ஷூங்லு கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உட்பட பலர் மீது விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும் என, பாரதிய ஜனதா கட்சியினர் வலிறுத்தியுள்ளனர். காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, ஷூங்லு கமிட்டியை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். விசாரணைக்குப் பின், இக்கமிட்டி அளித்த அறிக்கையில்,"டில்லி அரசின் தவறான நடவடிக்கையால் 25 ஆயிரம் கோடி ரூபாய் பொது பணம் வீணடிக்கப்பட்டுள்ளது' என, குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உட்பட பலரையும் விசாரணைக்கு உட்படுத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி, பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று, ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டில்லி பா.ஜ., தலைவர் விஜேந்திர குப்தா தலைமையில் நடந்த போராட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கு முன்பாக, அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ.,க்கு உத்தரவிடவேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

சுர்ஜித் லால் மனு : காமன்வெல்த் போட்டி முறைகேடு தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள போட்டி அமைப்பு குழுவின் துணை பொதுச் செயலர் சுர்ஜித் லால், ஜாமின் கோரி, சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி தல்வாந்த் சிங், மனு மீதான விசாரணையை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் கைதாகியுள்ள போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் கல்மாடி உட்பட ஐந்து பேரின் கோர்ட் காவல், வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. கல்மாடி உட்பட சிலர் தாக்கல் செய்த மனு கடந்த 26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,"மனு தாக்கல் செய்த ஐந்து பேரின் வாதங்களை கேட்ட பின் தான் தீர்ப்பு வழங்கப்படும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பதிவு செய்தது ErodeTimes on 5/31/2011 04:47:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for காமன்வெல்த் ஊழல்: ஷீலா தீட்சித்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் -பா.ஜ.,

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h