Ads

உயிருக்கு ஆபத்து – சாய்பாபா பேத்தி அச்சம்


அறக்கட்டளை உறுப்பினர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சாய்பாபாவின் பேத்தி செத்னா ராஜு குற்றம்சாட்டியுள்ளார். சாய்பாபாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவர் பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஈஸ்வரம்மா பெண்கள் நல டிரஸ்டின் தலைவர் ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை சாய்பாபாவின் அறை திறக்கப்பட்ட போது அந்த இடத்தில் சாய்பாபாவின் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சேர்க்கவில்லை என செத்னா குற்றம்சாட்டியுள்ளார். இதே குற்றச்சாட்டை செத்னாவின் சகோதரர் சரவணும் முன்வைத்துள்ளார். மேலும் புட்டபர்த்தியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடத்தப்பட்டது குறித்து போலீசார் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனவும் செத்னா ராஜு கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையில் புட்டபர்த்தியிலிருந்து கோடிக்கணக்கில் பணம் கடத்தப்பட்ட விவகாரத்தில் அறக்கட்டளை உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கடந்த ஏப்ரல் 24ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைந்ததை அடுத்து சொத்துக்களை நிர்வாகிப்பதில் அவரின் குடும்பத்தினருக்கும், சாய்பாபா அறக்கட்டளை  உறுப்பினர்களில் சிலருக்கும் இடையே வெளிப்படையாகவே பிரச்னை உருவானது.
இந்நிலையில் சாய்பாபா சொத்துக்களை முறைப்படி நிர்வகித்து, அவர் உலகம் முழுவதும் செய்து வந்த சமூக பணிகளை தொடர்ந்து நடத்த அறக்கட்டளைக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சாய்பாபாவின் சொத்துக்கள் குறித்து பிரச்னைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் சாய்பாபா பயன்படுத்தி வந்த யஜூர் மந்திர அறை கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அதில் 98 கிலோ தங்கம், 300 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 12 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது. இது சாய்பாபா பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, மறுநாள் இரவு புட்டபர்த்தியிலிருந்து பெங்களூர் சென்ற அறக்கட்டளை கார் ஒன்றில் ரூ.35 லட்சம் கடத்தப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். டிரஸ்ட் உறுப்பினர் ஒருவருக்கு இந்தப்பணம் சொந்தம் எனக் கூறப்பட்டது. இதற்கு மறுநாள் புட்டபர்த்தியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கொத்தசெருவு என்ற இடத்தில் தனியார் பஸ் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதிலிருந்து ரூ.5 கோடி அளவுக்கு இரண்டு கோணிப்பைகளில் பணக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை கொண்டு சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரில் ரூ.35 லட்சம் கடத்தப்பட்டது தொடர் பாக அறக்கட்டளை உறுப்பினர்கள் ஹரீஷ் ஆனந்த் செட்டி, சுகானந்த்  செட்டி மற்றும் கார் டிரைவர் சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இவர்களை வரும் 27ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பிரசாந்தி நிலையத்தில் 120 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் அடிக்கடி பணம், நகை போன்றவை கடத்தப்படுவது தொடர்பாக பிரசாந்தி நிலைய தலைமை செக் யூரிட்டி அதிகாரி பிரதான் என்பவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
கடத்தப்பட்ட ரூ.35 லட்சம் பிரசாந்தி நிலையத்தில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதாக அனந்த பூர் மாவட்ட எஸ்.பி., ஷான்வாஜ் காசிம் தெரிவித்துள் ளார். இதைத்தொடர்ந்து அங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த டிஎஸ்பி நரசிம்மலு என்பவர் திடீரென அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளார்

பதிவு செய்தது ErodeTimes on 6/23/2011 08:04:00 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for உயிருக்கு ஆபத்து – சாய்பாபா பேத்தி அச்சம்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h