Ads

தெய்வ பலம் வேண்டும்..!


-
ராஜசூய யாகம் செய்ய விரும்பினார் தர்மபுத்திரர். அதற்கு, தெய்வ பலம்
முக்கியம் என்பதால், கிருஷ்ணனிடம் அதை நடத்தி வைக்க வேண்டுமென்று
கேட்டுக் கொண்டார்; பகவானும் ஒப்புக் கொண்டார்.
ராஜசூய யாகம் என்றால், திக் விஜயம் செய்து, எல்லா அரசர்களையும்
ஜெயிக்க வேண்டும்.
-
மற்ற அரசர்களை ஜெயித்து விடலாம் அல்லது அவர்களை தன் வசப்படுத்தி
விடலாம்; ஆனால், ஜராசந்தனை ஜெயிப்பது சிரமம். அதனால், இதற்கு
பீமன் தான் சரியானவன் என்று எண்ணினார். ஜராசந்தன் என்பவன், இரு
உடற்கூறுகள் ஒன்றாக சேர்ந்த உருவம். அவனை வதம் செய்ய என்ன
செய்ய வேண்டும் என்பது கண்ணனுக்கு தெரியும்.
-
பீமன், ஜராசந்தன் யுத்தம் துவங்கியது. ஜராசந்தனை இரண்டாகக் கிழித்துப்
போட்டான் பீமன்; ஆனால், அது ஒன்று சேர்ந்து விட்டது. ஜராசந்தன்
எழுந்து வந்து யுத்தம் செய்தான். இப்படி பலமுறை, அவனை பீமன் கிழித்துப்
போட்டும் கூட, அவை ஒன்று சேர்ந்து விட்டது. பீமனுக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை. பக்கத்தில் நின்றிருந்த கிருஷ்ணனை, பரிதாபமாக பார்த்தான்.
-
உடனே, ஒரு தருப்பையை எடுத்து, இரண்டாக கிழித்து, தலைப்பை மாற்றி
கீழே போட்டான் கிருஷ்ணன். இதை கவனித்த பீமன், புரிந்து கொண்டான்.
உடனே, ஜராசந்தனை பிடித்து, அவன் கால்களை பிடித்திழுத்து, இரண்டு
கூறுகளாக்கி தலைப்பை மாற்றி, கீழே போட்டான். தலைப்பு மாறி கிடந்த
ஜராசந்தன் எழுந்து வந்து ஒட்டிக் கொள்ள முடியாமல் மாண்டு போனான்.
பிறகு, ராஜசூய யாகம் நடந்தது.
-
எவ்வளவு பலமிருந்தாலும் தெய்வ பலம் அவசியம். அதே போல, ராஜசூய
யாகத்தில் யார், யார் என்ன பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதையும்
தீர்மானம் செய்தார் பகவான். துரியோதனனுக்கு பொக்கிஷ சாலை பொறுப்பு;
கர்ணனுக்கு தானம் கொடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
-
துர்புத்தியுள்ள துரியோதனன் சந்தோஷப்பட்டான். கர்ணனிடம், தானம்
செய்யும் போது, ஒன்றுக்கு பத்தாக அள்ளிவிடு; பொக்கிஷம் காலியாகி
விடும்; யாக நடுவில் பொக்கிஷம் காலியானால், தர்மத்துக்கு ஒன்றும்
இல்லாமல் தர்ம புத்திரர் அவமானப்படுவார்; நாம் சந்தோஷப்படலாம்…’
என்றான்; கர்ணனும் சம்மதித்தான்.
-
ஆனால், கர்ணன் எவ்வளவுதான் வாரி, வாரிக் கொடுத்தாலும், பொக்கிஷம்
நிரம்பிக் கொண்டேயிருந்தது. பொருள் மேலும், மேலும் வந்து குவிந்து
கொண்டே இருந்தது. இவர்கள் திட்டம் பலிக்கவில்லை; அவமானப்பட்டனர்.
-
என்ன காரணம்? துரியோதனன் கையில் தன ரேகை இருக்கிறது; இது
பகவானுக்கு தெரியும். பொக்கிஷத்தை அவனிடம் ஒப்படைத்தால், பொக்கிஷம்
நிரம்பிக் கொண்டே இருக்கும். அதனால், அதை, அவனிடம் ஒப்படைத்தார்.
கர்ணனுக்கு தானம் செய்வதில் விருப்பம் அதிகம்; சளைக்கவே மாட்டான்;
அள்ளி, அள்ளிக் கொடுப்பான். யாகத்தில் அது தானே முக்கியம். அதனால்,
தானம் செய்வதை கர்ணனிடம் ஒப்படைத்தார்.
-
யாகம் நன்றாகவே நடைபெற்று முடிந்தது. துரியோதனனும், கர்ணனும்
போட்ட திட்டம் நிறைவேறவில்லை;பகவான் போட்ட திட்டம் தான்
நிறைவேறியது. நம்முடைய புத்திக்கு அப்பாற்பட்டது தெய்வ பலம். அந்த
பலத்தையே நாட வேண்டும்; மற்றபடி சவடால் பேர் வழிகளை நம்பினால்,
நடுத்தெருவில் நிற்க வேண்டியது தான்!

பதிவு செய்தது ErodeTimes on 5/11/2011 05:04:00 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for தெய்வ பலம் வேண்டும்..!

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h