மஞ்சள் விலை மேலும் குறையும் வாய்ப்பு
erode, news 6/09/2011 08:20:00 AM
மஞ்சள் விளைச்சல் அதிகரிப்பு மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக தொடர்ந்து மஞ்சள் விலை குறைந்து கொண்டே வருகிறறது. சென்ற வாரத்தை விட, நேற்று ஆயிரம் ரூபாய் குறைந்ததால், விவசாயிகள் விற்பனை செய்யாமல் குடோன்களிலேயே ஸ்டாக் வைத்து விட்டு சென்றனர். சென்றாண்டு தங்கத்துக்கு நிகராக மஞ்சள் விலை அமோகமாக விற்றது. நடப்பாண்டு மஞ்சள் சீஸன் சென்ற ஜனவரி மாதம் துவங்கியது. ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், வேளாண்மை கூட்டுறவு மஞ்சள் சங்கம், வெளிசந்தை, கோபி சொசைட்டி ஆகிய மஞ்சள் சந்தைகளுக்கு புதிய மஞ்சள் வரத்து அதிகளவு வரத்துவங்கியது. ஆனால், 2011ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மஞ்சள் சந்தைகளுக்கு வரத்து அதிகரிக்க துவங்கியதால், விலையும் படிப்படியாக குறைந்தது. விவசாயிகள் விலை குறைவால், மார்க்கெட்டிலேயே இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து வந்தனர். சென்ற ஐந்து மாதங்களுக்கு முன் 16,569 ரூபாய்க்கு விற்ற மஞ்சள், தற்போது 5,779 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 ஆயிரத்து 790 ரூபாய் விலை சரிந்துள்ளது. போதிய விலை கிடைக்காததால், மார்க்கெட்டுக்கு எடுத்து வரும் மஞ்சளை, விவசாயிகள் குடோன்களில் இருப்பு வைக்கின்றனர். மார்க்கெட்டுக்கு வரத்தும் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று, சென்ற வாரத்தை விட மஞ்சள் குவிண்டால் 1,109 ரூபாய் குறைந்தது. நேற்று மார்க்கெட் நிலவரப்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் 5,799 முதல் 7,761 ரூபாய், கிழங்கு 5,106ல் முதல் 6,779 ரூபாய்க்கு விற்பனையானது. சந்தைக்கு 286 மஞ்சள் மூட்டைகளில் 258 மூட்டைகள் விற்பனையானது. ஈரோடு சொசைட்டியில் விரலி 5898 முதல் 7,676 ரூபாய், கிழங்கு 5,568 முதல் 7,676 ரூபாய்க்கு விற்றது. 427 மூட்டைகள் வரத்தானதில் 287 மூட்டைகள் விற்பøøயானது. கோபி சொசைட்டியில் விரலி 5,827 முதல் 7,670 ரூபாய், கிழங்கு 5,769 முதல் 7,069 ரூபாய்க்கு விற்பனையானது. 237 மூட்டைகள் வரத்தானதில் அனைத்தும் விற்பனையானது. விலை வீழ்ச்சி மற்றும் விளைச்சல் காரணமாக நடப்பாண்டு 5,000 ரூபாய் வரை மஞ்சள் விலை போகும். அடுத்தாண்டு மேலும் வரத்து அதிகரிக்க உள்ளதால், 4,000 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கும் என மார்க்கெட் விற்பனைக் குழு நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.